பதிவு செய்த நாள்
12
அக்
2016
10:10
அனந்தாழ்வார், திருமலையில் வேங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சமயம், அவரைப் பார்க்க திருவரங்கத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். வெகுநேரத்துக்குப் பின்னரே வந்த அனந்தாழ்வாரிடம், திருமால் பக்தருக்கு உரிய குணங்கள் எவையெவை எனக் கூறுமாறு வேண்டினார், வந்தவர். கொக்கு போல, கோழி போல, உப்பு போல உம்மைப் போல இருப்பதுதான் மாலவன்அடியாரின் லட்சணங்கள்! என்றவர், வந்தவர் விழிக்கவே அதற்கான விளக்கத்தைச் சொன்னார். கொக்கு தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மீன் கிடைக்கும் வரை, மற்ற மீன்களைத் தள்ளிவிட்டுக் காத்திருப்பது போல, உலக இன்பங்களில் மனம் ஈடுபடுவதை, புறக்கணித்து, பகவானின் கைங்கர்யத்தைச் செய்வதற்கான பாக்கியத்தை, எதிர் நோக்கியவாறு இருக்க வேண்டும்.
கோழி கால்களால் குப்பைகளைக் கிளறி, வேண்டாதவற்றை ஒதுக்கி, இறுதியில் கிடைக்கும் நெல்மணிகளைக் கொத்தி எடுப்பது போன்று, உலகப் பொருட்கள் மீதான ஆசையை விலக்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றுவதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சமையலில் உப்பு பெரும் பங்கு வகித்தாலும், அது தன்னைக் காட்டிக் கொள்ளாமல் கரைந்து விடுகிறது. அது போலவே அடியவரும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தாமல், தான் சார்ந்திருக்கும் கோஷ்டிக்கு உயர்வை உண்டுபண்ண வேண்டும். இப்படியெல்லாம் இருப்பத்தோடு, நான் வருவதற்கு மிகவும் தாமதமானபோதும் பொறுமை காத்தீர்களே, இவ்வாறு பொறுமையுடன் இருப்பதும் மாலடியாரின் லட்சணம்தான்! சொல்லி முடித்தார், அனந்தாழ்வார்.