பதிவு செய்த நாள்
13
அக்
2016
11:10
திருப்பூர்: நவராத்திரி விழா நிறைவு பெற்றதால், துர்கா சிலைகள், பவானி கூடுதுறையில் விசர்ஜனம் செய்யப்பட்டன. திருப்பூர் நவதுர்கா பூஜா சமிதி சார்பில், வீரபாண்டி குப்பாண்டம்பாளையம் வாணியர் திருமமண்டபத்தில், நவராத்திரி துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. கடந்த, 1 முதல், 10 ம் தேதி வரை, தினந்தோறும் காலை, 8:00 மணி மற்றும் மாலை, 7:00 மணிக்கு பூஜை, பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு, மஹா நவமி சித்தி தாத்ரி பூஜை, ஹோமம் மற்றும் இரவு முழுவதும் பஜனை நடந்தது. நவராத்திரி பூஜை நிறைவு பெற்றதையடுத்து, மண்டபத்தில், 10 நாட்களாக வழிபட்டு வந்த, துர்காம்பிகை உள்ளிட்ட சிலைகள், நேற்று விசர்ஜனம் செய்வதற்காக, எடுத்து செல்லப்பட்டன. குப்பாண்டம்பாளையத்தில் இருந்து வேனில் கிளம்பிய ஊர்வலம், வீரபாண்டி வழியாக, தாராபுரம் ரோட்டை அடைந்தது. அங்கிருந்து, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சென்று, ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. திருப்பூர் காந்தி நகர் இ.பி., காலனியில் உள்ள கற்பகஜோதி ராஜ விநாயகர் கோவிலில், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொலு வைத்து தினமும் பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. நிறைவுநாளன்று, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச எழுது பொருட்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.