பதிவு செய்த நாள்
13
அக்
2016
12:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு, உற்சவர்கள் தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி பகுதியில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு முதல் பழையபேட்டை பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கவீஸ்வரர் கோவில் மற்றும் கிருஷ்ணன் கோவில், ராமர் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வினாயகர் கோவில், கல்கத்தா காளி கோவில் என, அனைத்து கோவில்களில் இருந்தும், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்தனர். அனைத்து தேர்களும் இரவு பழையபேட்டைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று காலை, பத்து தேர்களும் ஒன்றாக பழையபேட்டை காந்தி சிலை அருகில் நிறுத்தப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.