பதிவு செய்த நாள்
14
அக்
2016
12:10
திருப்பூர்: திருப்பூரில் நேற்று மாலை, 4:30 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை துவங்கி, ஒன்றரை மணி நேரம் வரை பெய்தது.இதனால், பிரதான ரோடுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரின் மத்தியில் உள்ள, விஸ்வேஸ்வரசுவாமி கோவிலுக்குள், மழைநீர் புகுந்தது. கோவிலை சுற்றிலும் உள்ள ரோடுகளில், மழை நீருடன், சாக்கடை கழிவும் சேர்ந்து, கோவில் வெளி பிரகாரம் முழுவதும் சூழ்ந்தது. நேற்று பிரதோஷம் என்பதால், வழக்கமாக நடக்கும் சிறப்பு பூஜைக்காக, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்தனர். திடீரென மழைநீரும், கழிவு நீரும் கோவிலுக்குள் வந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஒதுங்கக்கூட இடமின்றி, பலரும் அவதிக்குள்ளாகினர். நந்தியை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால், பிரதோஷ சிறப்பு பூஜை, வழிபாடுகள் தடைபட்டன. பிரதான ரோட்டில் வரும் மழை நீர், கோவிலுக்குள் நுழையும் வாய்ப்பு இருப்பதை அறிந்தும், ராஜகோபுரம், தெற்கு கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கோவில் நிர்வாகம், எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. அதேபோல், கோவிலுக்குள் விழும் மழை நீர் வெளியேறும் கட்டமைப்பில் உள்ள அடைப்புகளை கூட, அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததே, இந்த அவதிக்கு காரணமாக அமைந்தது. மழை நின்ற பிறகும் கூட, தண்ணீரை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்காததால், கோவில் வளாகம் முழுவதும், சேறும், சகதியுமாக மாறியது. இது, பக்தர்களை வேதனையடைய செய்தது.