அகத்தியர் வணங்கிய புல்லாணி அம்மன் வரலாற்றை சுமந்து நிற்கும் பீடம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2016 11:10
கீழக்கரை, திருப்புல்லாணி அருகே அகத்தியர் வணங்கிய புல்லாணி அம்மனை, தமிழ் மொழியில் புலமைபெற விரும்புவோர் வழிபட்டு செல்கின்றனர். திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சியில் உள்ளது புல்லாணி அம்மன் கோயில். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் புராதன சிறப்பை பெற்றதாகும். திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரைக்கு செல்வதற்காக புனித யாத்திரை மேற்கொண்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் இங்குள்ள புல்லாணி அம்மனை வழிப்பட்டுள்ளார். இதை உணர்த்தும் விதமாக கோயிலில் அகத்தியர் பீடம் அமைந்துள்ளது. 5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கருங்கல்லால் ஆன மலர்ந்த தாமரை வடிவிலான பீடம் எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் அரியமுத்து கூறுகையில், “சேதுக்கரை அருகில் உள்ள ஏகாந்த சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு வந்த அகத்தியர், அங்குள்ள தீர்த்தத்தில் நீராடியபின் சுயம்புவாக அவதரித்த புல்லாணி அம்மனை வணங்கி விட்டு சென்றுள்ளார். இதற்கு அடையாளமாக கோயிலின் இடது புறத்தில் அகத்தியர் பீடம் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2013ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த பீடம் நிறுவுவதற்கு முன்பு 3 அடி உயரத்திலான வணங்கிய நிலையில் அகத்தியர் சிலை இருந்தது. வாஸ்து சாஸ்திரப்படி அச்சிலைக்கு பதிலாக அகத்தியர் பீடம் நிறுவப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினத்தில் பீடத்திற்கு சிறப்பு பூஜைகளுடன், திருவாசகம் பாடப்படும். தமிழில் புலமை பெற விரும்பும் தமிழாசிரியர்கள், மொழிவல்லுநராக விரும்பும் பட்டதாரிகள் இங்குள்ள அகத்தியர், புல்லாணி அம்மனை வணங்கி ஆசிபெற்று செல்வது வழக்கமாக உள்ளது என்றார்.