பதிவு செய்த நாள்
03
அக்
2011
03:10
காங்கிரஸ் மகாநாடு முடிந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவிலிருந்த வேலை சம்பந்தமாக வர்த்தகச் சங்கத்தையும் மற்றும் பலரையும் நான் காணவேண்டியிருந்ததால் கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கினேன். இத் தடவை ஹோட்டலில் தங்கவில்லை. அதற்குப் பதிலாக இந்தியா கிளப்பில் ஓர் அறையில் தங்குவதற்கு வேண்டிய அறிமுகத்தைப் பெற ஏற்பாடு செய்துகொண்டேன். அந்தக் கிளப் உறுப்பினர்களில் சில பிரபலமான இந்தியரும் உண்டு. அவர்களுடன் தொடர்பு கொண்டு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வேலையில் அவர்களுக்குச் சிரத்தையை உண்டாக்க வேண்டும் என்றும் எண்ணினேன். பிலியர்டு விளையாடுவதற்காகக் கோகலே இந்தக் கிளப்புக்கு அடிக்கடி வருவது உண்டு. நான் கல்கத்தாவில் கொஞ்ச காலம் தங்கவேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்ததும், தம்முடன் வந்து தங்குமாறு அவர் என்னை அழைத்தார். இந்த அழைப்பை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால் நானாக அங்கே போவது சரியல்ல என்று எண்ணினேன். அவர் இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்தார். நான் வராது போகவே அவரே நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றார். கூச்சப்படும் என் சுபாவத்தைக் கண்டுகொண்டதும் அவர் கூறியதாவது, காந்தி, நீங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டியவர். ஆகவே, இப்படிக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது. எவ்வளவு பேரோடு பழகுவது சாத்தியமோ அவ்வளவு பேரோடும் நீங்கள் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் காங்கிரஸ் வேலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.
கோகலேயுடன் நான் தங்கியதைப் பற்றிக் கூறும் முன்பு இந்தியா கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச் சமயம் லார்டு கர்ஸான் தமது தர்பாரை நடத்தினார். தர்பாருக்கு அழைக்கப் பெற்றிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களில் சிலரும் இந்தக் கிளப்பில் அங்கத்தினர்கள். கிளப்பில் இருக்கும்போது அவர்கள், எப்பொழுதும் வங்காளிகள் வழக்கமாக அணியும் உயர்ந்த வேஷ்டி கட்டி, சட்டையும் அங்கவஸ்திரமும் போட்டிருப்பார்கள். ஆனால், தர்பார் தினத்தன்று அவர்கள் வேலைக்காரர்கள் அணிவதைப் போன்ற கால்சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பளபளப்பான பூட்ஸூகளும் அணிந்து இருந்ததைக் கண்டேன். இதைப்பார்த்து என் மனம் வேதனையடைந்தது. இந்த உடை மாற்றத்திற்குக் காரணம் என்ன என்று அவர்களில் ஒருவரை விசாரித்தேன்.
எங்களுடைய துர்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம் என்று அவர் பதில் கூறினார். ஆனால், வேலைக்காரர்கள் அணியக்கூடிய இந்தக் கால் சட்டையும் பளபளப்பான பூட்ஸூகளும் எதற்காக? என்றேன். எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருப்பதாக காண்கிறீர்களா? என்று அவர் சொல்லிவிட்டு மேலும் கூறியதாவது அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள். நாங்களோ லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள். தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால் அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமே இல்லை!
இவ்விதம் மனம் விட்டுப் பேசிய அந் நண்பருக்காகப் பரிதாபப்பட்டேன். இது மற்றொரு தர்பாரை எனக்கு நினைவூட்டுகிறது. ஹிந்து சர்வகலாசாலைக்கு லார்டு ஹார்டிஞ்சு அஸ்திவாரக்கல் நாட்டியபோது அங்கே ஒரு தர்பார் நடந்தது. ராஜாக்களும் மகாராஜாக்களும் குழுமியிருந்தனர். இந்த விழாவுக்கு வருமாறு பண்டித மாளவியாஜி என்னைப் பிரத்தியேகமாக அழைத்திருந்தார். நானும் போயிருந்தேன். மகாராஜாக்கள், பெண்களைப்போல ஆடை அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருப்பதைப் பார்த்து, மனம் வருந்தினேன். அவர்கள் பட்டுக் கால்சட்டை போட்டுக் கொண்டு, பட்டுச் சட்டைகளும் அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி முத்துமாலை தரித்திருந்ததோடு, கைகளில் கொலுசுகள் போட்டிருந்தார்கள். அவர்களுடைய தலைப்பாகைகளில் முத்து, வைரப் பதக்கங்கள் இருந்தன. இவ்வளவும் போதாதென்று தங்கப் பிடி போட்ட பட்டாக் கத்திகள், அவர்களுடைய அரைக் கச்சைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன.
இந்த ஆடை, அலங்காரங்களெல்லாம் அவர்களுடைய அடிமைத்தனத்தின் சின்னங்களேயன்றி அவர்களது ராஜ சின்னங்கள் அல்ல என்பதைக் கண்டேன். தங்களுடைய பேடித்தனத்தைக் காட்டும் இப்பட்டையங்களையெல்லாம் இவர்கள் தங்கள் இஷ்டப்படி விரும்பி அணிந்திருந்தார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் இந்த ராஜாக்கள் தங்களுடைய ஆபரணங்களையெல்லாம் இத்தகைய வைபவங்களுக்கு அணிந்துகொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன். இப்படி நகைகளையெல்லாம் அணிவதைச் சில ராஜாக்கள் மனப்பூர்வமாக வெறுக்கின்றார்கள் என்பதையும், இந்த தர்பார் போன்ற சமயங்களில் அல்லாமல் வேறு எப்பொழுதுமே அவைகளை அவர்கள் அணிவதில்லை என்பதையும் அறிந்தேன்.
எனக்குக் கிடைத்த இந்த விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மற்றச் சமயங்களிலும் அவைகளை அவர்கள் அணிந்தாலும், அணியாது போயினும், சில பெண்கள் மாத்திரமே அணியக்கூடிய நகைகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் வைசிராயின் தர்பாருக்குப் போகவேண்டியிருக்கிறது என்பது ஒன்றே மனத்தை நோகச் செய்வதற்குப் போதுமானதாகும். செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும் அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்!