பதிவு செய்த நாள்
31
அக்
2016
12:10
ஆர்.கே.பேட்டை : ஐப்பசி அமாவாசை திதியான நேற்று, கேதார கவுரி நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது. சுமங்கலி வரம் வேண்டி பெண்கள் மேற்கொண்ட இந்த நோன்பு பண்டிகையால் சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளி பண்டிகையின் அடுத்த நாளான அமாவாசை திதியில், கேதார கவுரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டும் என, கன்னி பெண்களும் மேற்கொள்ளும் இந்த விரதத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
நோன்பு காரணமாக, நேற்று, ஆர்.கே.பேட்டை, வாடாவள்ளி உடனுறை விசாலீஸ்வரர் கோவிலில், காலை முதல், இரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் தங்களின் குல வழக்கப்படி, விநாயகர், அம்பிகை மற்றும் சிவபெருமானுக்கு நோன்பு படையல் வைத்தனர். இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார் கோவில், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, சுமங்கலி வரம் கேட்ட பெண்கள், இன்று முதல், பிள்ளை வரம் கேட்டு, சஷ்டி விரதத்தை துவக்குகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி உற்சவம், இன்று துவங்குகிறது.