பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தின் பெருமைக்கான காரணங்களில் ஒன்றான ராமானுஜர் கோவில் குளத்திற்கு, ஸ்ரீராமானுஜரின், 1,000ம் ஆண்டு விழாவிலாவது விடிவு காலம் பிறக்குமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வைணவ மதத்தில் சிறந்த மகானாக திகழ்ந்த ராமானுஜர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் பிறந்தாலும், அவர் வாழ்ந்த வீடும், அவருக்கு தனி சன்னிதியும் காஞ்சிபுரத்தில் உள்ளன. செவிலிமேடு பகுதி, அவருக்கு வரதராஜ பெருமாள் காட்சி கொடுத்த இடமாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள கோவில், 700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது.கோவில் எதிரில் அனுஷ்டான குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தினமும் ராமானுஜர் நீராடி, வரதராஜ பெருமாளுக்கு நித்திய அபிஷேகத்திற்காக அங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி முதல் தேதி அனுஷ்டான குளம் உற்சவத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் ராமானுஜர் கோவிலுக்கு எழுந்தருள்வார். ராமானுஜருக்கு, பெருமாள் தாயார் வேடுவர் கோலத்தில் காட்சி கொடுத்ததால் அன்று, பெருமாள் அந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தற்போது அந்த குளம் துார்ந்து, கரைகளில் வேலி செடி முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது ராமானுஜர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் இந்த குளத்தை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த காலத்தில் உருவாக்கிய கோவில் குளத்தை அவரின், 1,000ம் ஆண்டு விழாவிலாவது சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.