திருப்புலிவனம்: திருப்புலிவனத்தில் உரிய பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறத்தில், 2 ஏக்கரில் அமைந்துள்ள குளத்தை, அப்பகுதியினர் கடந்த காலங்களில் நீர்ஆதாரமாக பயன்படுத்தி வந்தனர். புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்ட பின் இந்த குளத்தை கோவில் விசேஷங்களுக்கும், கால்நடைகளின் நீர் ஆதாரத்திற்கும் பயன்படுத்தினர். நாளடைவில், உரிய பராமரிப்பு இல்லாததால் குளத்தை சுற்றிலும் முட்புதர்கள் உருவாகி, துார்ந்து குளத்திற்கான அடையாளம் தெரியாமல் சிதைந்துள்ளது; விசேஷ காலங்களிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே , இக்கோவில் குளத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி,துார்வாரி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.