பதிவு செய்த நாள்
03
நவ
2016
11:11
திருப்பூர்: நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நேற்று நடந்தது. திருப்பூர், நல்லூரில், பழமையான, விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், கந்த சஷ்டி விழா, 31ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, 10:00க்கு, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், தேன், பஞ்சாமிர்தம், தினை மாவு, நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், சூரசம்ஹார வைபவத்துக்கு தளபதியாக இருந்த வீரபாகு மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டி பூர்த்தி வரை, தினமும் காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும், 5ம் தேதி, காலை, 9:00க்கு, பட்டி விநாயகர் கோவிலிருந்து, 108 பால் குட ஊர்வலமும், ஸ்ரீ சுப்ரமணியருக்கு பாலாபிஷேகமும் நடக்கிறது. மாலை, 6:00க்கு, வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 6:30க்கு, சூரசம்ஹாரமும் நடக்கிறது. வரும், 6ம் தேதி, காலை 10:00க்கு, திருக்கல்யாணம் நடக்கிறது.