பதிவு செய்த நாள்
07
நவ
2016
12:11
தர்மபுரி: கந்த சஷ்டியையொட்டி, தர்மபுரியில் சூரசம்ஹார விழா நடந்தது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த, 31ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. விழாவின், ஆறாம் நாளான நேற்று முன்தினம் மாலை, சூரசம்ஹார நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் துவங்கியது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிவசுப்ரமணிய சுவாமி, குமாரசுவாமிப்பேட்டை கோவிலில் இருந்து, பென்னாகரம் சாலை, நான்கு ரோடு வழியாக, தர்மபுரி தலைமை அஞ்சல் நிலையம் அருகேயுள்ள கோவில் வாகன நிறுத்துமிடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு இரவு, 9:30 மணிக்குமேல் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பூர்த்தி ஹோமமும், இரவு, 9:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணமும் நடந்தது. இதேபோல், தர்மபுரி எஸ்.வி.,ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹார விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.