பதிவு செய்த நாள்
07
நவ
2016
02:11
ஈரோடு: திண்டல் வேலாயுதசாமி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் உறவினர்கள் புடைசூழ, பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு, திண்டல்மலை வேலாயுதசாமி கோவில் கந்தசஷ்டி விழாவின், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்த, திண்டல் வேலாயுதசாமியின் திருக்கல்யாண காட்சியை காண, ஏராளமான மக்களும், காப்புகட்டி விரதம் கடைபிடித்த பக்தர்களும், உறவினர்கள் புடைசூழ, குடும்பம் சகிதமாக பங்கேற்றனர். பெண் வீட்டு சார்பில் ஒரு புறமும், மாப்பிள்ளை வீட்டு சார்பில் ஒருபுறம் பக்தர்கள் அமர்ந்து, சம்மந்திக்கு சந்தனம் பூசுதல், தொடங்கி, மாப்பிள்ளை சீர், பெண் வீட்டார் சீர், இணைச்சீர், அனைத்து சடங்குகளையும் நேர்த்தியுடன் ஒவ்வொன்றாக செய்தனர். மணமகன், மணமகள், கங்கணம் கட்டும் நிகழ்ச்சிக்குப் பிறகு, வேத மந்திரங்கள் முழங்க முப்பத்து முக்கோடி தேர்வர்கள் (வேதமந்திரத்தில் அழைக்கப்பட்டிருந்தனர்) முன்னிலையில், வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை திருமணம் நடந்தது. மாலை மாற்றல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, திருமண வீட்டாருக்கு மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து கல்யாண விருந்தும் நடந்தது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது.