பதிவு செய்த நாள்
07
நவ
2016
02:11
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவத்துடன், கந்தசஷ்டி விழா நிறைவு பெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை மலை முருகன் கோவிலில் நடக்கும், தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி விழாக்களுக்கு மட்டும், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை மலை மேல் உள்ள, முருகன் கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக அழைத்து செல்வது வழக்கம். விழா நிறைவு நாளில் மீண்டும் கைலாசநாதர் கோவிலுக்கு, சாமிகளை அழைத்து வந்து, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். இந்நிலையில் கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த, கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவத்துடன் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் நேற்று காலை, 10:00 மணிக்கு மேல் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.