நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், தறுதலைகளாக திரிந்துவிட்டு, இறுதியில் பெற்றோர் மீது பழி போடுவார்கள். பெற்றவர்கள் சம்பாதித்து தந்த காசைப் படிப்பதற்கு பயன்படுத்தாமல், தீமை தரும் பொழுதுபோக்குகளில் செலவிடுவார்கள். மேலும், சிலர் நன்றி மறந்து தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வார்கள். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள் குறித்து நிறையவே நாம் படிக்கிறோம். மத்திய அரசாங்கம் முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒன்றை அமைத்து, கொடுமைக்கார பிள்ளைகளிடமிருந்து பெற்றவர்களைக் காப்பாற்றும் சட்டம் கொண்டு வருமளவு நிலைமை போய் விட்டது. பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள், பைபிளைப் படித்திருந்தால் இப்படி செய்திருப்பார்களா?“உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,” என்ற வசனமும், “உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே,” என்ற வசனமும் சிந்தித்தக்கது. பெற்றோரை மதிக்காமல் அகால மரணம் அடைவதை விட, அவர்களை மதித்து ஆயுளை அதிகரித்துக் கொள்வதுடன், ஆண்டவரின் ஆசிர்வாதத்தையும் குழந்தைகள் பெற வேண்டும். பெற்றவர்கள் தங்கள் அன்புக் குழந்தைகளுக்கு இந்த வசனங்களை கற்றுத்தந்து, இளமையிலேயே பெற்றோரைக் காப்பாற்றும் நல்லெண்ண விதையை ஊன்ற வேண்டும்.