பதிவு செய்த நாள்
06
அக்
2011
01:10
ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் சிவபெருமான் உருவ ரூபத்தில், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. செப்., 27ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. முதல் நாள் காலை 5 மணிக்கு, அன்னை மரகதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை ஊஞ்சலில் உற்சவர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காமாட்சி, மீனாட்சி, ஆண்டாள், மகாலட்சுமி, துர்க்கை அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும், நேற்று அம்பாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று உற்சவர் அம்மன் சரஸ்வதி அலங்காரத்திலும் நாளை வியாழக்கிழமை மகிஷாசூர மரத்தினி அலங்காரம் செய்யப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் சேர்மன் முனிசேகர்ரெட்டி தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.