பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமி நாட்களில், கிரிவலப்பாதையில் ஆட்டோக்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படும் என, எஸ்.பி, பொன்னி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை நகரில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படும், அடையாள அட்டை இல்லாமல் இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். கிரிவலப்பாதையில் அனைத்து பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீப திருவிழா நாட்களிலும் ஆட்டோக்களை கண்டிப்பாக இயக்க கூடாது. வெளியூர், வெளி மாவட்ட ஆட்டோக்களுக்கும் அனுமதியில்லை. மீறி இயக்கினால், போக்குவரத்து விதிகளின் படி அபராதம் விதிப்பு அல்லது ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். அனைத்து ஆட்டோக்களிலும் கண்டிப்பாக வாகன பதிவு சான்று, வைத்திருக்க வேண்டும். ஆட்டோ காப்பீட்டை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். வாகன புகை பரிசோதனை மற்றும் குறைவான சத்தம் வரும் வகையில் இன்ஜின் பரிசோதனை செய்து வைத்திருக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ஆட்டோக்களை வேகமாக ஓட்டக்கூடாது, ஆட்டோ டிரைவர்கள் பேட்ஜ் மற்றும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக சீருடையில்தான் வாகனம் ஓட்ட வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலர்களிடமிருந்து, ஆட்டோக்களுக்கு கண்டிப்பாக எப்.சி., தகுதி சான்று பெற்று வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.