பதிவு செய்த நாள்
14
நவ
2016
12:11
காளையார்கோவில்: கொல்லங்குடி அருகே 2000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி ஆறுமுகம். இவர் மனைவி வேலு,46. இவர் நேற்று கொல்லங்குடி அருகே உள்ள கல்லணை கண்மாய்க்குள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது காலில் தட்டிய மண் பானையின் மேல் விளிம்பு பகுதியை பார்த்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு தெரியப்படுத்தினார். அவர்கள் வந்து பார்த்து தாசில்தார் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனர். வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி, தாசில்தார் (பொறுப்பு) விஜயகுமாரி, ஆர்.டி.ஓ., அரவிந்தன் மற்றும் போலீஸ் எஸ்.ஐ., சையது அலி சென்று கண்மாய்க்குள் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி முன்னிலையில் புதைந்து இருந்த முதுமக்கள் தாழியை தோண்டி எடுத்தனர். உடைந்து விட்ட அந்த தாழி, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அவர் கூறுகையில், “ பண்டை காலத்தில் இறந்தவர்களை பெரிய மண் குடுவைக்குள் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பண்பாண்டங்கள், இதர பொருட்களுடன் புதைப்பது வழக்கம். அதன்படி கல்லணை கண்மாய்க்குள் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங் கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்,” என்றார்.