பதிவு செய்த நாள்
16
நவ
2016
10:11
சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக சரண கோஷங்கள் முழங்க சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இனி தொடர்ச்சியாக 41 நாட்கள் பூஜைகள் நடைபெறும். புதிய மேல்சாந்திகளும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சபரிமலையில் இன்று அதிகாலை 3:00 மணிக்கு தொடங்கும் மண்டலகால பூஜைக்காக நடை நேற்று மாலை 5:00-க்கு திறக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக சபரி மலையில் தங்கி பதவி நிறைவு பெறும் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் கணபதி கோயிலில் விளக்கேற்றி விட்டு 18-ம் படி வழியாக இறங்கி சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார். பின்னர் கோயிலுக்கு திரும்பும் போது 18-ம் படிக்கு கீழே நின்ற புதிய மேல்சாந்திகள் சபரிமலை- உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புறம் - மனுகுமார் நம்பூதிரி ஆகியோருக்கு மாலை அணிவித்து 18-ம் படி வழியாக அழைத்து வந்தார். அவர்கள் கோயில் முன்புறம் வந்ததும் அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, கோயில் முன்புறம் தரையில் அமர்த்தப் பட்டார். அவருக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தி ஒரு குடம் நீரால் அபிஷேகம் நடத்தினார்.
பின்னர் அவரது செவியில் ஐயப்பன் மூல மந்திரத்தை சொல்லிக் கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல மனுகுமார் நம்பூதிரிக்கு மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில் தந்திரிஅபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றார்.நேற்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப் பட்டது.நேற்று இரவு 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், தந்திரி அபிஷேகம் நடத்திய பின்னர் மண்டலகால நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். வரும் 41 நாட்களிலும் காலை 4:15 மணி முதல் பகல் 12:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 7:30-க்கு உஷபூஜை, பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை, மாலை 6:30-க்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 10:00 -க்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும்.
அலைமோதிய கூட்டம் : சபரிமலையில் நடைதிறந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வசதிக்காக இந்த ஆண்டு மேலும் பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் பாதுகாப்புக்காக திருவனந்தபுரம் சிற்றி துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் குமார் தலைமையில் இரண்டாயிரம் போலீசார் வந்துள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படை வீரர்களும், தேசிய பேரிடர் நிவாரண படையினரும் வந்துள்ளனர்.