பதிவு செய்த நாள்
17
நவ
2016
11:11
சபரிமலை: சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. நாடு முழுவதும் உள்ள, ரூபாய் நோட்டு பிரச்னை, சபரிமலையிலும் கடுமையாக உள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கார்த்திகை முதல் தேதியான நேற்று, அதிகாலை, 3:00 மணிக்கு, சபரிமலையில், புதிய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து, தந்திரி கண்டரரு ராஜீவரரு, அய்யப்பனுக்கு பல்வகை அபிஷேகங்கள் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.
கார்த்திகை முதல் தேதியான நேற்று, அதிகாலையில் நடை திறந்த போது, அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது; 18-ம் படியேறுவதற்காக, நீண்ட வரிசை காணப்பட்டது. பக்தர்கள் தங்கள் வழிபாடுகளை நடத்தவும், வழிபாடு பொருட்களை சமர்ப்பிக்கவும், கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.
பக்தர்கள் சிரமம்: நாடு முழுவதும் உள்ள ரூபாய் நோட்டு பிரச்னை, சபரிமலையிலும் கடுமையாக உள்ளது. தேவசம் போர்டு வழிபாடு மற்றும் பிரசாத கவுன்டர்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. அடையாள அட்டை நகலுடன் வருபவர்கள், சன்னிதானம் தனலெட்சுமி வங்கி கிளையில் இருந்து, 4,500 ரூபாய் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், ஏற்கனவே, ஊரில் பணம் எடுத்தவர்கள் எடுக்க முடியுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. பக்தர்களுடன், இங்கு பணியாற்றும் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, தாராளமாக உண்டியலில் போடலாம் என, பக்தர்களுக்கு, தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.