பதிவு செய்த நாள்
16
நவ
2016
11:11
ஊத்துக்கோட்டை: கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், சபரிமலைக்கு செல்ல மாலை போட்டு விரதமிருக்கும் அய்யப்ப பக்தர்கள் கடைகளில் விற்கப்படும் துளசி, சந்தன மாலைகளை வாங்கிச் சென்றனர். இந்துக்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு தெய்வத்திற்கு விசேஷமான மாதங்களாக உள்ளது. ஆடிமாதம் அம்மனுக்கும், புரட்டாசி பெருமாளுக்கும் உகந்த மாதங்கள். அந்த வகையில் கார்த்திகை மாதம் சபரிமலையில் வீற்றிருக்கும் அய்யப்ப சுவாமிக்கு விசேஷமான மாதம். கார்த்திகை முதல் நாள், பக்தர்கள் துளசி, சந்தன மாலைகள் அணிந்து, காலை, மாலை இரு வேளைகள் குளித்து பக்தி யுடன் விரதம் இருப்பர். இவர்கள், 48 நாட்கள் விரதம் இருந்து, கேரளாவில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு இருமுடி ஏந்திச் சென்று வழிபடுவர். இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி. இதையொட்டி, ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை அணிபவர்கள் கடைகளுக்குச் சென்று மாலை வாங்கிச் சென்றனர். மேலும், இவர்கள் துணி கடைகளுக்குச் சென்று கறுப்பு, நீலம், ஆரஞ்சு ஆகிய கலர்களில் வேட்டி மற்றும் சட்டைகளும் வாங்கிச் சென்றனர். இன்று முதல் கோவில்களில், அய்யப்ப பக்தர்களின் பஜனை பாடல்களுடன் சுரண கோஷம் கேட்கும்.