பதிவு செய்த நாள்
19
நவ
2016
10:11
சபரிமலை: சபரிமலையில் பெண்களுக்கு ஒட்டு மொத்த தடை இல்லை; குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டுமே தடை உள்ளது, என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலையில் ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டை போக்கவும், பக்தர்களுக்கு தேவையான பணம் கிடைக்கவும், கூடுதல், ஏ.டி.எம்.,கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையுடன் வந்தால், சன்னிதானம் தனலெட்சுமி வங்கியில் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். இந்த நோட்டுகளை மாற்ற பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதல் கவுன்டர்களை திறக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.கிரடிட் கார்டு பயன்படுத்தி, பிரசாதம் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. செல்லாத நோட்டுகளை பிரசாத கவுன்டர்களில் வாங்க முடியாததற்கு, சில்லரை தட்டுப்பாடே காரணம். சபரிமலையில் பெண்களுக்கு தடை இல்லை; குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு தான் தடை உள்ளது. மத நல்லிணக்கத்தை நிலை நிறுத்தியுள்ள, அய்யப்பனின் வாழ்க்கை வரலாற்றை, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.