12ம் நுாற்றாண்டு கல்வெட்டு: மேல்மலையனுார் அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2016 12:11
செஞ்சி: அண்ணமங்கலம் ஏரியை மன்னர்கள் காலத்தில் செப்பனிட்டதற்கான இரண்டு கல்வெட்டுக்களை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் தாலுகா, அண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள, ஏரியின் கரையில் இரண்டு மலைப்பாறைகளில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. இக் கல்வெட்டுக்களை, தொல்லியல் ஆய்வாளர் லெனின், பென்னகர் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் முனுசாமி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆய்வாளர் லெனின் கூறியதாவது: அண்ணமங்கலம் கிராம ஏரி பாறையில் உள்ள கல்வெட்டு 12ம் நாற்றாண்டில் சோழ மன்னன் ராசாதிராசன் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பழுதான நிலையில் இருந்த அண்ணமங்கலம் ஏரியின் மதகை ராசாதிராசன் அதிகாரியான ஓதனாவி போத்தன் என்பவர் புதுப்பித்ததும், இதே மதகை ராசாதிராசனின் மற்றொரு அதிகாரி குடிகாரியுடையான் தேவன் செப்பனிட்டதையும் பதிவு செய்யப் பட்டுள்ளது. மற்றொரு பாறையில் உள்ள கல்வெட்டு, அதே நுாற்றாண்டின் பிற்பகுதியில் பிற்கால பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. மீண்டும் பழுதடைந்த அண்ணமங்கலம் ஏரி மதகை, காடவன் விக்கன் வீரராயன் கச்சிபெருமாள் ஆணையின் பேரில் ஒய்மா நாட்டு பைசார் ஊரை சேர்ந்த சொக்கனாயனான வீரராய வேளாண் என்பவர் ஏரியின் மடையை அடைத்து மதகையும் செப்பனிட்டு, இதன் அருகே வீரகாளியம்மன் சிற்பம் வடித்ததை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், மன்னராட்சி காலத்தில் ஏரி மதகுகள் கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது தெரிய வருகிறது. இவ்வாறு ஆய்வாளர் லெனின் கூறினார்.