பதிவு செய்த நாள்
24
நவ
2016
11:11
சபரிமலை: சபரிமலையில், கோககோலா விற்பனைக்கு, கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறை தடைவிதித்துள்ளது. பாட்டில் குடிநீர் தடையை தொடர்ந்து, ஏக போக விற்பனைக்கு திட்டமிட்ட கோககோலா கம்பெனி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு முதல், பாட்டில் குடிநீர் விற்பனை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், தேவசம்போர்டும், குடிநீர் வாரியமும் இணைந்து, பம்பை முதல், சன்னிதானம் வரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, குழாய் மூலம் வழங்கி வருகிறது. எனினும், கடைகளை நாடும் பக்தர்களுக்காக, கோககோலா விற்பனைக்கு தேவசம்போர்டு அனுமதி வழங்கியது. 200 மில்லி, 25 ரூபாய்க்கும், 300 மில்லி, 35 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. கோககோலா கம்பெனியின் இயந்திரம் வழியாக, பேப்பர் கப்புகளில் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேவசம்போர்டு அனுமதி வழங்கியது. ஆனால், இந்த முடிவு விவாதத்துக்குள்ளானது. மலையேறும் ஒரு பக்தர் மூச்சிரைக்க வரும் போது, காஸ் நிறைந்த இந்த பானம் குடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. மேலும், விதிகளை தளர்த்தி டெண்டர் வழங்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறை, சபரிமலை மற்றும் சபரிமலைக்கு வரும் பாதைகளில் கோககோலா விற்பனையை தடை செய்துள்ளது. இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் வியாபாரம் நடக்கிறது என குறிப்பிட்டுள்ளது.