பதிவு செய்த நாள்
24
நவ
2016
11:11
திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், 57ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த, 16ல் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், 108 சங்காபிஷேகம், பகவதி சேவை, நவ கலச அபிஷேகம் என, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
நேற்று முன்தினம் இரவு, புலி வாகனத்தில் ஐயப்பன் எழுந்தருளி, எதிரிகளை அழிக்கும், பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி ஆறாட்டு உற்சவம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் தெப்பக் குளத்தில், கங்கை, யமுனா, காவிரி நதிகளின் தீர்த்தம் கலக்கப்பட்டது. வெட்டி வேர், பன்னீர், பச்சை கற்பூரம், தாமரை, துளசி ஆகியன, குளத்தில் தூவப்பட்டது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கோவிலில் இருந்து சுவாமி ஐயப்பன் ஆறாட்டு உற்சவத்துக்கு புறப்படும் நிகழ்வு நடைபெற்றது. பகல், 11:00 மணிக்கு, பெருமாள் கோவில் குளக்கரையில் அமைத்திருந்த பச்சை பந்தல் மேடையில், சுவாமி எழுந்தருளினார். 11:45 மணிக்கு, உத்திராட நட்சத்திரத்தில், பக்தர்களின் "சரணம் ஐயப்பா கோஷம் முழங்க, சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடைபெற்றது. சபரிமலை ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில், ஆறாட்டு நடந்தது. திருமஞ்சனம், நெய், தேன், பஞ்சாமிர்தம், பால், இளநீர், தயிர், விபூதி மற்றும் வாசனை திரவியங்களில், அபிஷேகம் செய்யப்பட்டது; குளத்தில், சுவாமிக்கு ஆறாட்டு நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், ஐயப்ப சுவாமி எழுந் தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குஜராத்தி திருமண மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது.