பதிவு செய்த நாள்
07
அக்
2011
12:10
பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது நாளுக்கு நாள், மேலும் மேலும் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது. அவர்களுக்கு உண்மையான உபாத்தியாயராகவும் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டுமாயின், நான் அவர்களுடைய உள்ளங்களைத்தொட வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நான் உதவி செய்ய வேண்டும். இளமையின்காரணமாக அவர்களுக்கு எழும் அபிலாஷைகளை எல்லாம் சரியான வழிகளில்நான் கொண்டு செலுத்த வேண்டும். சிறையிலிருந்து சில சத்தியாக்கிரகிகள் விடுதலையாகவே டால்ஸ்டாய் பண்ணையில்வசிப்பவர்களின் தொகை மிக அதிகமாகிவிட்டது. அங்கேயே இருந்த சிலர் போனிக்ஸைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்களைநான் அங்கேயே அனுப்பி விட்டேன். இங்கே அதிகக் கஷ்டமான நிலைமையைச் சமாளிக்க வேண்டியதாயிற்று. அந்த நாட்களில் நான் ஜோகன்னஸ்பர்க்கிற்கும் போனிக்ஸு க்கும் போய் வந்தவண்ணம் இருக்க வேண்டியதாயிற்று. ஒரு சமயம் நான் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்த போது, ஆசிரமவாசிகளில் இருவர்ஒழுக்கம் தவறி நடந்து விட்டார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஒரு தவறுஅல்லது ஒரு தோல்வி போன்ற செய்திகூட எனக்கு அவ்வளவு அதிர்ச்சியை உண்டாக்கியிராது. ஆனால், இச்செய்தியோ, எனக்கு இடி விழுந்தது போல் ஆயிற்று. அன்றே போனிக்ஸு க்குப் போக ரெயிலில் புறப்பட்டேன். ஸ்ரீகால்லென்பாக்கும் என்னுடன் வருவதாகப் பிடிவாதமாகக் கூறினார். அப்பொழுது நான் எந்த விதமான நிலைமையில் இருந்தேன் என்பதை அவர் கவனித்தார். எனக்கு இவ்வளவு கலக்கத்தை உண்டாக்கிவிட்ட செய்தியைக் கொண்டுவந்தவர் அவரேயாகையால் நான் தனியாக அங்கே போவது என்பதை எண்ணவும் அவரால் முடியவில்லை.
என் கடமை என்ன என்பது பிரயாணத்தின்போது எனக்குத் தெளிவாகத் தோன்றியது. தமது பாதுகாப்பில் இருப்பவர்கள் அல்லது தம்மிடம் மாணவர்களாக இருப்பவர்கள் செய்துவிடும் தவறுக்குப் பாதுகாப்பாளர் அல்லது உபாத்தியாயர், ஓரளவுக்காவது பொறுப்பாளியாவார் என்பதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்ட சம்பவம் சம்பந்தமாக என் பொறுப்பு இன்னதென்பது எனக்குப் பட்டப் பகல் போல் தெளிவாயிற்று. இவ்விஷயத்தில் என் மனைவி எனக்கு முன்பே எச்சரிக்கை செய்திருந்தாள். ஆனால், நான் எல்லோரையும் நம்பிவிடும் சுபாவமுள்ள - வனாகையால் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டேன். குற்றம் செய்துவிட்டவர்கள்,என் மனவேதனையையும், தாங்கள் செய்துவிட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் உணரும்படி செய்வதற்குள்ள ஒரே வழி, பிராயச்சித்தத் தவத்தை நான் மேற்கொள்ளுவதுதான்என்பதை அறிந்தேன். ஆகையால், ஏழு நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது, நாலரை மாத காலத்திற்கு தினம் ஒரு வேளையே சாப்பிடுவது என்று விரதம் எடுத்துக் கொண்டேன். நான் இவ்விதம் செய்யாதிருக்கும்படி என் மனத்தை மாற்ற ஸ்ரீகால்லென்பாக் முயன்றும் பயன்படவில்லை. என்னுடைய இப்பிராயச்சித்தத் தவம் சரியானதே என்பதை அவர் முடிவில் ஒப்புக்கொண்டார். தாமும் அவ் விரதத்தை மேற்கொள்ளப்
போவதாகப் பிடிவாதம் செய்தார். அவருடைய தெள்ளத்தெளிவான அன்பை எதிர்க்க என்னால் ஆகவில்லை.
நான் செய்துகொண்ட இத்தீர்மானம் என் மனத்திலிருந்து பெரும் பாரத்தை நீக்கியதால் நான் அதிக மன ஆற்றலை அடைந்தேன். குற்றம் செய்துவிட்டவர்கள் மீது இருந்த கோபம் குறைந்தது. அதற்குப் பதிலாக அவர்கள் மீது எனக்குப் பரிசுத்தமான இரக்கமே உண்டாயிற்று. இவ்வாறு எவ்வளவோ மன ஆறுதல் அடைந்தவனாக நான் போனிக்ஸ் போய்ச் சேர்ந்தேன். அச்சம்பவத்தைக் குறித்து மேற்கொண்டும் விசாரித்தேன். நான் அறிய வேண்டிய மற்றும் பல விவரங்களையும் தெரிந்துகொண்டேன். எனது பிராயச்சித்தத் தவம் எல்லோருக்கும் மனக்கஷ்டத்தை உண்டாக்கியது. ஆனால், அதனால்நிலைமை தெளிவடைந்தது. பாவம் செய்துவிடுவது எவ்வளவு பயங்கரமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டார்கள். பையன்கள், பெண்கள் ஆகியோருக்கும் எனக்கும் இருந்த பந்தமும் பலமானதாகவும் உண்மையானதாகவும் ஆயிற்று. இச்சம்பவத்தினால் ஏற்பட்ட ஒரு நிலைமையின் காரணமாகக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு பதினான்கு நாட்கள் உண்ணாவிரதத்தை நான் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பலன்கள் நான் எதிர்பார்த்ததையும்விட அதிகமாகவே இருந்தன.
மாணவர்கள் ஏதாவது தகாத காரியத்தைச் செய்துவிட்டால் அதற்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது உபாத்தியாரின் கடமை என்பதை இச்சம்பவங்களிலிருந்து எடுத்துக் காட்டுவது அல்ல என் நோக்கம். என்றாலும், சில சமயங்களில் இவ்விதக் கடுமையான பரிகாரம் அவசியமாகிறது என்று நான் கருதுகிறேன். ஆனால், இப்பரிகாரத்தை மேற்கொள்ளுவதற்குத் தெளிவான நோக்கமும் ஆன்மிகத் தகுதியும் இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்கும்மாணவருக்குமிடையே உண்மையான அன்பு இல்லாதபோது,மாணவர் செய்துவிட்ட தவறைக் குறித்து மனப்பூர்வமான துயரம் உபாத்தியாயருக்கு ஏற்படாத போது, உபவாசம் பொருந்தாது. அது தீமையானதாகவும் ஆகக்கூடும். இத்தகைய விஷயங்களில் உண்ணாவிரதம் இருப்பது என்பது சரிதானா என்பதைச் சந்தேகிக்க இடமிருந்தபோதிலும், மாணவர்களின் தவறுக்கு உபாத்தியாயர்கள் பொறுப்பாளிகளாவார்கள் என்பதில் மாத்திரம் சந்தேகமே இல்லை. முதல் பிராயச்சித்த விரதம் எங்களில் யாருக்கும் கஷ்டமானதாக இல்லை.என்னுடைய வழக்கமான காரியங்களில் எதையும் நான் நிறுத்தி வைக்கவோ, நிறுத்திவிடவோ நேரவில்லை. இந்தப் பிராயச்சித்தத் தவம் இருந்த காலம் முழுவதும்நான் பழ ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு வந்தேன்என்பதை நினைவுபடுத்த வேண்டும். இரண்டாவது உபவாச காலத்தின் பிற்பகுதியில் எனக்கு அதிகக் கஷ்டமாகவே இருந்தது.
ராம நாமத்தின் அற்புதமான சக்தியை அச்சமயம்நான் முற்றும் அறிந்திருக்கவில்லை. கஷ்டத்தைச் சகித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சக்தி, அந்த அளவுக்கு என்னிடம் குறைவாகவே இருந்தது. அதோடு பட்டினி விரதத்தின் முறைகளையும் நான் அப்பொழுது நன்கு அறிந்தவனல்ல. பட்டினிக்காலத்தில் தண்ணீர் குடிப்பது, எவ்வளவுதான் குமட்டலை உண்டாக்குவதாகவும் ருசியற்றதாகவும் இருந்தாலும், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமானது என்பதும் எனக்குத் தெரியாது. மேலும், முதல் உண்ணாவிரதம் எளிதாக இருந்தது, இரண்டாவது உண்ணாவிரத விஷயத்தில் நான் அலட்சியமாக இருக்கும்படி செய்துவிட்டது. முதல் உண்ணாவிரதத்தின்போது டாக்டர் கூனேயின் முறைப்படி நான் தினமும் குளித்து வந்தேன். ஆனால், இரண்டாவது உண்ணாவிரதத்தின்போது, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவ்வாறு குளிப்பதை விட்டுவிட்டேன். தண்ணீர் குடிக்கப் பிடிக்காததனாலும், குடித்தால் குமட்டல் உண்டாவதனாலும் மிகக் குறைவாகவே தண்ணீர் குடித்தேன்.இதனால், தொண்டை வறண்டு பலவீனமாயிற்று. கடைசி நாட்களில் மிகவும் மெல்லிய குரலிலேயே என்னால் பேச முடிந்தது. என்றாலும்,நான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வந்தேன். எழுத வேண்டிய அவசியம் வந்தபோது, நான் சொல்லிப் பிறரை எழுதச் செய்தேன். ராமாயணம் முதலிய சமய நூல்களைப் படிக்கச் சொல்லித் தவறாமல் கேட்டு வந்தேன். அவசரமான காரியங்களைக் குறித்து விவாதிப்பதற்கும் ஆலோசனை கூறுவதற்கும் வேண்டிய பலம் எனக்கு இருந்தது.