புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசல் என்ற திருத்தலம் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் தொப்பி அணிந்த திருக்கோலத்தில் தனிச்சன்னதியில் வீற்றிருப்பது வித்தியாசமான காட்சி. காமதேனு என்ற பசுவிற்கு சிவபெருமான் வேங்கை வடிவில் காட்சி கொடுத்து ஆட்கொண்ட தலமும் இதுதான். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் எண்கோண வடிவில் முருகப்பெருமான் சன்னதி அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் தாமரை மலர் மீது ஒரு காலை மடித்தும், மறுகாலை நீட்டியும் அமர்ந்துள்ளார். பொதுவாக கோயில்களிலும் மூல ஸ்தானத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பர். ஆனால் இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் உள்ளனர். மூலவரின் மீது தினமும் மாலை வேளைகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இங்கு தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக அபூர்வ காட்சி தருகிறார்.