மதுரை: மதுரை வைகை ஆற்றின் குறுக்கே திருமலைராயர்படித்துறையில் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இப்பகுதியில் மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான காசிவிஸ்வநாதர் கோயிலின் முகப்பு பகுதியை மறைத்து பாலத்தின் வழித்தடம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு முன்பு தி.மு.க., ஆட்சியில் வைகை ஆற்றின் குறுக்கே தத்தனேரி, திருமலைராயர்படித்துறையில் இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இவ்விரண்டு தரைப்பாலங்களை இடித்து விட்டு புதிதாக உயர்மட்ட பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
தத்தனேரி பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பிலும், திருமலைராயர்படித்துறை பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலும் உயர்மட்ட பாலங்கள் கட்ட மாநகராட்சி 2014ல் ஒப்புதல் வழங்கியது. கட்டுமானப்பணிகள் 2015 மே மாதம் துவங்கியது.
பாலம் திறப்பில் சிக்கல்: திருமலைராயர்படித்துறை உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப்பணி 90 சதவிகதம் முடிக்கப்பட்டுள்ளது. எனினும் வைகை ஆற்றின் கரை மேல் திருமலைராயர்படித்துறை பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான காசிவிஸ்வநாதர் கோயிலின் முகப்பு பகுதியை மறைத்து பாலத்தின் வழித்தடம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோயில் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இதில் திலகர்திடல் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்பட்டு வருகிறது. இதை இடித்து விட்டு வழித்தடத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சரியான திட்டமிடல்கள் இல்லாமல் பாலம் கட்டப்படுவதால் கோயிலின் புனிதமும், மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புனிதம் காக்கப்படுமா: திருமலைராயர்படித்துறையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணன் கோயில் திருவிழாவின் போது இக்கோயிலில் கிருஷ்ண பகவான் எழுந்தருள்வார். புட்டுத்திருவிழா, மாசி திருவிழாக்களின் போது சுவாமி எழுந்தருளி ஊர்வலம் வருவது வழக்கம். தற்போது கோயிலின் முகப்பு பகுதியை மறைத்து பாலம் கட்டுமானப்பணி நடப்பதை தடுத்தோம். இதையடுத்து கோயிலுக்கான நடைபாதையை ஒதுக்கினர். எதிர்புறம் சாலையை அகலப்படுத்த முடிவு செய்துள்ளனர். கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும். இதை மனதில் வைத்து பாலப்பணிகளை மாநகராட்சி கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றார். பாதிப்பு இல்லா பாலம் : திருமலைராயர்படித்துறையை சேர்ந்த சுந்தரம் கூறியதாவது: காசிவிஸ்வநாதர் கோயில் பழமையும், புராதான பெருமையும் உடையது. விழாக்காலங்களில் சுவாமி ஊர்வலம் நடக்கும். இதற்கு இடையூறாக கோயிலின் முகப்பை மறைத்து பாலம் கட்டுப்படுவது குறித்து பி.டி.ஆர். தியாகராஜன் எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தோம். அவரின் முயற்சியால் கோயிலின் வழித்தடத்துக்கு இடம் ஒதுக்கியுள்ளனர். கோயில் எதிர்புறம் கூடுதலாக இடத்தை எடுத்து வழித்தடம் அமைக்கவுள்ளனர். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அவுட் போஸ்ட் ‘அவுட்’ : மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: பாலப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. திருமலைராயர்படித்துறை பகுதியில் மின் கம்பங்களை அகற்றும்படி மின் வாரியத்திடம் கோரியுள்ளோம். பாலத்தின் அகலம் 30 அடி. திருமலைராயர் படித்துறை பகுதியில் 21 அடியாக பாலத்தின் அகலம் குறைக்கப்படும். எனினும் காசிவிஸ்வநாதர் கோயில் எதிரே போலீஸ் அவுட்போஸ்ட் கட்டடம் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்கம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரிக்குள் பாலப்பணிகள் முடிக்கப்படும். பாலத்தை திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.