பஞ்சபூதங்களில் தனித் தன்மை பெற்றது அக்னி. அக்னிக்கு வடிவம் உண்டு; அதேநேரத்தில் வடிவம் இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாகவே தொன்று தொட்டநாள் முதல் இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில் -ஜோதி ஸ்வரூபணாகவே காண்கின்றனர். எனவே அக்னியைக் கொண்டு ஐயனை வழிபடுவது ஒரு நடைமுறையாகக் கருதப்படுகிறது. இதன் ஒரு பாகமே கற்பூர ஆழி. ஐயனின் அருள் முகமும் அக்னியே. ஆதலால், அக்னியை வழிபடுவது மற்றும் அக்னியைச் சுற்றி வருவது ஆகியவை ஐயனை வழிபடுவதற்குச் சமம். கற்பூர ஆழி, மரக்கட்டைகளையும் கற்பூரத்தையும் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆழி பூஜை தொடங்குவதற்கு முன் சிற ப்பு பூஜைகளும் பலிகளும் நடத்தப்படும். முற்காலத்தில் ஆழி பூஜை பழம்பெரும் குருசாமி பார்வதிபுரம் வெங்கடேஸ்வர ஐயர் மூலம் உடும்பாறை கோட்டை, கரிமலை போன்ற புனித இடங்களில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில் இந்த பூஜை பூதப்பாண்டி இராமநாத வாத்தியார் மூலமாக தொடரப் பட்டது. தற்போது நடைபெறும் ஆழிபூஜையும் இவற்றின் தொடர்ச்சியே.