பதிவு செய்த நாள்
14
டிச
2016 
11:12
 
 ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில், அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, ஊட்டி காந்தள் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு கோவிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டனர். தொடர்ந்து அர்ச்சனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் சேவா சங்கம், ஆலய முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.
ஊட்டி எல்க்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பிரசாத வினியோகம் நடந்தன. மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல, நஞ்சநாடு கிராமத்தில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அருவங்காடு சித்தி வினாயகர் கோவிலில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பிரசாத வினியோகம் நடந்தது. கூடலுார் மக்கள் தங்கள் வீடுகளில் கோலமிட்டு அதன் மீதும், வீட்டு திண்ணைகளிலும் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில், கிராம பகுதிகளில் மடடுமின்றி, நகர பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன.