பதிவு செய்த நாள்
16
டிச
2016
11:12
சாயல்குடி: ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமைவாய்ந்த திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடக்கிறது. டி.எம்.கோட்டை என்ற திருமாலுகந்தான் கோட்டையில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த செஞ்சுடைநாதர் சமேத கருணாகடாச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பிரகார மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம், மகாமண்டபம் கருங்கற்களால் எழுப்பப்பட்டுள்ளன. இங்கு கோயிலின் ஸ்தல வரலாறு, பாண்டிய, நாயக்கர், சேதுபதி மன்னர்களின் பராக்கிரமங்கள், கொடை வழங்கிய நிலங்கள், கிராமங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கல்வெட்டும் உள்ளது. இதில் பிராமி, வட்ட வடிவ தமிழ் எழுத்துக்கள் உள்ளன.
மூலவர் செஞ்சுடைநாதர் மூலஸ்தான விமான கலசம் கருங்கல் வார்ப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள கன்னிமூலகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதிகளில் திருப்பணி வேலைகள் பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் துவங்கி மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து கோயில் ஸ்தானிக குருக்கள் கூறுகையில்,“ திருமால் தனது அவதாரத்தில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, கருணாகடாச்சி அம்மன், சிவன் ஆகியோரது கருணையை பெற்ற ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு திருமாலுக்கு சன்னதியில்லை. எனவே அருகில் உள்ள கொண்டுநல்லான்பட்டியில் கோயில் உள்ளது. கடலாடி, சாயல்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்களிடம் நன்கொடை திரட்டப்பட்டு திருப்பணிவேலைகள் நடக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானம், இந்துசமய அறநிலையத்துறையின் மூலம் இன்னும் ஓராண்டிற்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது,” என்றார்.