பதிவு செய்த நாள்
16
டிச
2016
12:12
கோவை : கோவையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, மருதமலை, மாசானியம்மன், பேரூர், ஈச்சனாரி, காரமடை கோவில்களில், பக்தர்களிடம் அதிக விலைக்கு பிரசாதம் விற்பனை செய்தது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏழாவது படைவீடாக போற்றப்படும், முருகன் கோவிலில் ஒன்றான, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், முறுக்கு, அதிரசம், லட்டு, தினைமாவு, பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இவை தரமும், எடையும் குறைவாக இருந்தன.இது குறித்து பக்தர்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் முருகேசன், பிரசாதங்களை விற்பனை செய்யும் குத்தகைதாரருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார். 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குத்தகையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என, விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
மருதமலை அடிவாரத்திலிருந்து மலைப்பகுதி வரை உள்ள, எட்டு கடைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேபோல், கோவை - பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ஆனைமலை மாசானியம்மன் கோவில், காரமடை அரங்கநாத சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
அறநிலையத் துறைக்கு அறிவுரை: இது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை சார்பில், அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், இறைவன் மீதான பக்தியால், அன்றாடம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் நம்பிக்கையை பாழ்படுத்தும் வகையில், தரமில்லாத பிரசாதத்தை வினியோகம் செய்வதோ, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்வதோ தவறு. கோவில் பிரசாதங்களை நியாயமான விலைக்கு, விற்க வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுப்போம் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.