பதிவு செய்த நாள்
16
டிச
2016
05:12
தவஞானியரான ரிஷிகள் நேரடி இறைதரிசனங்களின் மூலமாக அடைந்த ஞானப் பொக்கிஷங்களே இந்து தர்மம் அல்லது இந்து மத சாஸ்திரம் - வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வேதம் என்ற சொல் வித் (அறிவு) என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. புலன்களுக்கு அகப்படாத அறிவைக் கொடுக்கும் சாதனம் வேதம். நான்மறை என்றும் வழங்கப்படுகிறது. அதன் உட்பொருள், நான் என்ற அகங்காரத்தை மறையச் செய்யும் ஞான சாதனம். வேதங்கள் இறைவனின் மூச்சுக்காற்றுபோல் ஆதி அந்தம் இல்லாமல் உள்ளன. ரிஷிகளால் பெறப்பட்டு, சுரத்தோடு ஓதப்பட்டுச் சீடர் பரம்பரைக்குச் செவி வழியாக வழங்கப்பட்டுத் தொடர்ந்து வந்ததால் ஸ்ருதி என்றும் எழுதப்படாததால் இவற்றிற்கு எழுதாக்கிளவி என்றும் பெயர்.
வேதங்களின் பிரிவுகள்: வேதங்கள் வியாச மகரிஷியால் பல பிரிவுகளையும், உட்பிரிவுகளையும் உள்ளடக்கி நான்காகப் பிரிக்கப்பட்டன. அவை - ரிக், யஜுர், சாமம், அதர்வணம்.
வேதங்களில் உள்ளது என்ன? வேதங்கள் பொதுவாக இறைவன் யார்? அவரை எப்படி அடைவது? நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை எப்படி வெளிப்படச் செய்வது? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன. வேதங்கள் ஞானப் பொக்கிஷங்கள் என்பதால் இன்றைய அறிவியல், வேதியியல், வானசாஸ்திரங்கள் என்று அனைத்தின் தோற்றுவாயாக அமைகின்றன. இந்த வேதங்களின் தோற்றம் கி.மு. 5000 முதல் 4000 ஆண்டுகளுக்கு முந்தையது என மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வேதங்கள் அநாதியானவை என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வேதமும் பொதுவாக நான்கு பிரிவுகளை உடையது.
1. சம்ஹிதை - மந்திரங்கள், தோத்திரங்கள். 2. பிராம்மணம் -மந்திரங்கள் மற்றும் சடங்குகளுக்கான விளக்கம். 3. ஆரண்யகம் -வனத்தில் செய்யும் தியானங்கள். 4. உபநிடதங்கள் - ஆன்மிக உண்மைகளைப் பற்றியும் ஆன்ம அனுபூதி பற்றியும் விளக்குபவை.
பண்டைய காலத்தில் அக்னி மூல வழிபாடே விளங்கி வந்தது. அக்னி மூலம் இறைவனுக்குத் தாம் விரும்பும் பொருட்களை ஆஹுதியாக அளித்தனர். இவை யக்ஞங்கள் என்று அழைக்கப்பட்டன. மேற்கண்ட நான்கு பகுதிகளையும் இரு பிரிவுகளாக வகுப்பர்.
கர்மகாண்டம்: சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யம் ஆகியவை இதில் அடங்கும். இவையனைத்தும் மனத்தூய்மைக்கான மார்க்கத்தைக் காட்டும். இது புறவழிபாடுகளை உள்ளடக்கியிருப்பதால் கர்ம காண்டம் என்று அழைக்கப்பட்டது.
ஞானகாண்டம்: வேதத்தின் ஒரு பகுதியே உபநிடதங்கள். உபநிஷத் என்பதற்கு குருவின் அருகிலிருந்து கற்றல் என்று பொருள். இவை வேதத்தின் சாரத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும். இறைஞானத்தை அடையும் வழியையே முதன்மையாகக் கூறுவதால் இதற்கு ஞானகாண்டம் என்று பெயர்.
உபநிடதங்கள் பல என்றாலும் தற்போது 108 மட்டும் உள்ளன. அவற்றுள் ஈச, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, ப்ரச்ன, சாந்தோக்ய, பிருஹதாரண்யக ஆகிய பத்தும் முதன்மையாகக் கொள்ளப்படுகின்றன.
ஸ்மிருதிகள்: வேதங்களை அடியொற்றி பிற்காலத்து ரிஷிகள் மற்ற சாஸ்திரங்களை இயற்றினர். இவற்றில் மனிதன் தன் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும், வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பற்றி வழிகாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் போன்ற தனிமனித வாழ்க்கை நிலையை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற வாழ்வியல் நடைமுறைகளும் அவற்றில் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றைச் செய்தவர்களுள் யாக்ஞவல்கியர், மனு முக்கியமானவர்கள் ஆவர்.
இந்த ஸ்மிருதிகள் மனிதன் தன் பிறப்பிற்கு ஏற்றபடி வாழ்வின் எந்த வயதில், எந்தப் படிமுறையில் உள்ளானோ அதற்கு ஏற்ற வகையில் செய்யக்கூடிய, செய்யக்கூடாதச் செயல்களைக் கூறும்.
இவை யாவும் ஒருவனைத் தூய்மையாக்கும் சித்த சுத்தியை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டவை. இவை காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்படச் சொல்லப்பட்டதால், காலத்திற்குக் காலம் புதிய ரிஷிகளின் மூலம் இவை மறு சீரமைப்பு செய்யப்படுகின்றன. புதிய ஸ்மிருதிகளின் தேவை ஏற்படுகின்றபோதெல்லாம் தவஞானியர் தோன்றிஅதை நிறைவேற்றுகின்றனர் என்பது நமது மதத்தின் சிறப்பம்சம்.