நமது முன்னோர்கள் கோயில்களை நிர்மாணித்தபோது, அதனுள் எத்தனையோ விஞ்ஞான அதிசயங்களை, மருத்துவ ரகசியங்களை இணைத்து, மக்களுக்கு நலம் தரும் விதமாக அமைத்தார்கள். அதனாலேயே நம்முடைய பெரியவர்கள் ஏதாவது கஷ்டம் என்றால், கோயிலுக்குப் போய் தெய்வத்தை வணங்கி, பிரகாரத்தைச் சுற்றி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். அப்படிப்பட்ட கோயில்களில் பலன் தரும் விஷயங்களில் மகத்தானது ஸ்தல விருட்சங்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான ஸ்தல விருட்சம் இருக்கும். அவை நமக்கு அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றை நாம் உணர்ந்து போற்றினோம் என்றால் நம் பெரியவர்களின் அருமையை, நம் மதத்தின் பெருமையை நினைத்து நன்றி கூறினோம் என்றால் அதுவே நமக்கு மிகப்பெரும் ஆசியாக தெய்வ அருளாக அமையும்.