சபரிமலையில் ஏழு லட்சம் பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2016 01:12
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் அன்னதானத்தில் இதுவரை ஏழு லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: சீசன் தொடங்கியது முதல் தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிடுகின்றனர். இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நன்கொடை கிடைத்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபமாக சபரிமலை மண்டபத்தை மாற்ற தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலையில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் பற்றிய புகார் கிளம்பிய நிலையில் அங்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது. இனி தினமும் தயாரிக்கப்படும் உணவு ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு புகார் பெட்டியும், புகார் புத்தகமும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலை கோயில் நடை அதிக நாட்கள் அடைக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. இது பக்தர்களுக்கு பேருதவியாக உள்ளது. நெய்யபிேஷகத்துக்காக காத்து நிற்கும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக 1000 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. கூட்டம் அதிகரிக்கும் போது போலீசார் பொறுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐகோர்ட் உத்தரவு படி மாற்று குடிநீர் வசதி செய்யப்பட்டதால் 90 சதவீத பிளாஸ்டிக் குறைந்துள்ளது. சபரிமலை தேவைகளுக்கு பாத்திரம் வாங்கிய வகையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கிடைத்த புகாரை தொடர்ந்து இந்த விசாரணை விஜிலென்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதை மாநில ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கும் பரிந்துரைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.