பதிவு செய்த நாள்
24
டிச
2016
11:12
ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாம்பழத்துறையில் மணமகள் அழைப்பு ஊர்வலம் நடந்தது.இங்கு தர்மசாஸ்தா, புஷ்கலாதேவிக்கு சம்பிரதாய முறைப்படி ஜோதிரூப தரிசனம், பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த விழா, திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் ஆண்டு தோறும் நடக்கிறது. சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை மணந்து, ஆரியங்காவில் அன்னதானப் பிரபுவாக தர்மசாஸ்தா வீற்றிருக்கிறார். இதனால், சவுராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி முறையாக, திருவாங்கூர் மன்னர் வம்சத்தினர் கருதுகின்றனர். மதுரையில் செயல்படும் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மற்றும் கேரள தேவசம்போர்டு இணைந்து விழாக்களை நடத்துகின்றனர்.
ஜோதி ரூப தேவி : மாம்பழத்துறையில் பகவதி அம்மன் ரூபத்தில் வீற்றிருக்கும் புஷ்கலாதேவி, நேற்று மணமகள் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாம்பழத்துறை மக்கள், கோயில் தந்திரி சம்பு சர்மா, தேவசம்போர்டு ஆலோசனை குழு தலைவர் சந்திரசேகரன், செயலர் பிரகாஷ், துணை தலைவர் பாபு சார்பில் சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது; பின், பரிவட்டம் கட்டி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். மாம்பழத்துறை ஸ்ரீபுஷ்கலா தேவி ஜோதிமய சவுராஷ்டிரா மகாஜன சங்க தலைவர் மோகன், செயலர் குப்புசாமி தலைமையில் அன்னதானம் நடந்தது. நேற்று மதியம் 1:30 மணிக்கு, புஷ்கலா தேவியை ஜோதி ரூபமாக எடுத்து வந்த தந்திரி, சவுராஷ்டிரா சங்க நிர்வாகிகள் கே.ஆர்.ராகவன், எஸ்.ஜெ.ராஜன், எஸ்.எஸ்.மோகன், எஸ்.ஜெ.கண்ணன், டி.எஸ்.ஆனந்தம் உள்ளிட்டோரிடம் வழங்கினார். ஜோதி மய ஊர்வலம் நடந்தது.
சாஸ்தாவுடன் ஐக்கியம் : ஆரியங்காவு ஊர் எல்லையில் ஜோதி மய ஊர்வலத்துக்கு, கோயில் தந்தரி ஸ்ரீராஜூ, மக்கள் சார்பில் வரவேற்பு கொடுத்தனர். அம்பாள் ஜோதி, தர்மசாஸ்தாவை வலம் வந்தது. மாலை 6:45 மணிக்கு கர்ப்பக்கிரகத்தில் சுவாமி ஜோதியுடன், அம்பாள் ஜோதி ஐக்கியமானது. பாண்டியன் முடிப்பு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் இன்று இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. சுவாமி சார்பில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன், அம்பாள் சார்பில் சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன் பிரதிநிதியாக இருப்பர்.