பதிவு செய்த நாள்
29
டிச
2016
12:12
பரமக்குடி: பரமக்குடி ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. புனிதப்புளி ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு மஞ்சள், திரவியம், பன்னீர், பால், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு ஆகிய திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புஷ்ப விமானத்தில் சர்வ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ராமநாதபுரம் அரண்மனை வாசல் பால ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வடை, துளசி மாலை, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஆஞ்சநேய பக்தர்கள் செய்தனர்.
* பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* பரமக்குடி வீரஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 1008 வடைமாலை சாற்றி வழிபாடு நடந்தது.
* காக்காதோப்பு பால ஆஞ்சநேயருக்கு கனகாபிஷேகம் நடந்தது.
* எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமர், லெட்சுமணர், சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது.
* திருவாடானை மங்களநாதன்குளம் அனுமன் கோயிலில் யாகம், மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெற்றிலை, துளசி மாலை, வெண்ணெய், வடை மாலை அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.