பதிவு செய்த நாள்
30
டிச
2016
01:12
கோபி: மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், 5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கோபி அருகே, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, நேற்று வழக்கமான கோலாகலத்துடன் நடந்தது.
விழாவில் தீ மிதிக்க, நேற்று முன்தினம் இரவு முதலே, பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தலைமை பூசாரி கோபால், ஆகமவிதிப்படி குண்டத்தின் முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பூக்களை அள்ளி வீசினார். கூடியிருந்த பக்தர்கள் அதை போட்டி போட்டு பிடித்தனர். அதற்கு பின் குண்டத்தில் இருந்து, நெருப்பை இரு கைகளால் அள்ளி வீசி, 8:10 மணிக்கு குண்டம் இறங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதையடுத்து, ஆண், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, 5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது.