பதிவு செய்த நாள்
04
ஜன
2017
12:01
சேலம்: சேலம், உடையாப்பட்டியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்படி, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் கூறியதாவது: சேலம், உடையாப்பட்டி புறவழிச்சாலை அருகில், மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம், 600 அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை, பெரியண்ணன் செட்டியார் என்பவர் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். தற்போது இந்த நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சொக்கலிங்கம் என்பவர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, வாடகைக்கு விடுவதாக, அதே கட்சியை சேர்ந்த பிரமுகர் அசோகன் என்பவர் அறநிலையத்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பேளூர் ஈஸ்வரன் கோவில் நிர்வாக அதிகாரி ராஜகோபால் தலைமையில், கோவிலுக்கு வந்து அளவீடு செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.