பதிவு செய்த நாள்
04
ஜன
2017
12:01
ஓசூர்: ’ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிவில், 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பாறை கல்வெட்டுகள் அழிவில் விழிப்பில் உள்ளதால், அவற்றை பாதுகாக்க வேண்டும்’ என, வரலாற்று தேடல் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால, இரு பாறை கல்வெட்டுகள் கிடைத்தன. இதுகுறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மொத்தம், 26 தமிழ் கல்வெட்டுகளை, 1974ல், தொல்லியல் துறை பதிவு செய்தது. இதில், ராஜேந்திரசோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன், ஹோய்சாள அரசர்களான வீர விஸ்வநாதன், வீர நரசிம்மன், வீர ராமநாதன் ஆகியோர் கொடுத்த நில தானங்கள் குறித்தும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள், ஆறடி நீளத்திற்கும் அதிகமாக இருப்பதால், பாதிக்கு மேல் எழுத்துகள் தெரியாமல் அழிந்துள்ளன. இரு கல்வெட்டுகளிலும், அமுது படைப்பதற்காக நிலம் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கழனியில் இருந்து வரும் வட்டி வருவாயில், அமுது படைக்க வேண்டும் என்பதற்காக, கோவில் அதிகாரியான மஹாச்வரர் என்பவரிடம் நிலம் ஒப்படைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகள், இரண்டும் கோவிலுக்கு வெளியே இருப்பதால், மக்கள் நடந்து சென்று, அவற்றின் மீதுள்ள எழுத்துகள் அழிந்துள்ளன. அழிவில் விழிப்பில் உள்ள இந்த, இரு கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.