பதிவு செய்த நாள்
14
அக்
2011
11:10
தூத்துக்குடி:தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி ஐந்து கருட சேவை விழா பிரமாண்டமாக நடக்கிறது. வைகுண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் புரட்டாசி சனிக்கிழமை விழா இந்த ஆண்டும் கடந்த 3 வாரமாக கோலாகலமாக நடந்தது.விழாவின் சிறப்பு அம்சமாக புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நாளை (15ம் தேதி) 5 கருடசேவை பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளை காலை 5 மணிக்கு கோபூஜையுடன் வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா துவங்குகிறது. இதனை தொடர்ந்து சுப்ரபாத பாராயணம், பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல் நடக்கிறது. இதனை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு அந்த அலங்காரத்தில் வைகுண்டபதி பெருமாள் காட்சியளிக்கிறார். திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு என்ன அலங்காரம் செய்யப்படுமோ அதே போன்று ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி கடைசி சனிக்கிழமை மட்டும் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாளுக்கு செய்யப்படுவதால் அன்று பெருமாளை தரிசித்தால் திருப்பதிக்கு சென்று வந்தது போன்று புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலையில் இருந்து இரவு வரை தொடர்ச்சியாக பிரசாதம் வழங்கப்படுகிறது. ஒன்றரை டன் எடை கேசறி மற்றும் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் போன்ற பிரசாதங்கள் இடைவிடாமல் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. மாலை 7 மணிக்கு 5 கருடசேவை பெருவிழா நடக்கிறது. வைகுண்டபதி பெருமாள், ரெங்கநாதபெருமாள், வரதராஜபெருமாள், ஆதிஜெகநாதபெருமாள், வெங்கடாஜலபதி பெருமாள் பக்தர்களுக்கு தனித்தனியாக காட்சியளிக்கிறார். கோயிலில் இருந்து யானை, 24 பேர் கொண்ட கேரள செண்டைமேளம், 5 செட் மங்களவாத்தியம், 30 பேர் கொண்ட நாதஸ்வர குழுவினர் முன் செல்ல ஐந்து பெருமாளும் ரதவீதி உலா வருதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்தபெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் சிரமம் இல்லாமல் பெருமாளை தரிசிக்க விரிவான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளது.