பதிவு செய்த நாள்
13
ஜன
2017
11:01
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஜன12 முன்தினம் இரவு, ஆருத்ரா அபிஷேகத்தை முன்னிட்டு, 33 வகையான அபிஷேகங்கள், நடராஜ பெருமானுக்கு நடத்தப்பட்டன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால், ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது.
இக்கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதே, ஆருத்ரா தரிசனம் என, அழைக்கப்படுகிறது. அந்த வகையில், ஜன12 முன்தினம், ஆருத்ரா அபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, ரத்தின சபாபதிப் பெருமான் கோவில் வளாகம் பின்புறத்தில் உள்ள, ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், இரவு, 9:10 மணிக்கு விபூதி அபிஷேகத்துடன், ஆருத்ரா அபிஷேக விழா துவங்கியது.பின், நடராஜருக்கு, கதம்பத் துாள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடி, பலா, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள், ஜன12 அதிகாலை, 3:30 மணி வரை நடத்தப்பட்டன.அதிகாலை, 4:30 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, சர்வ அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஜன12 பிற்பகல், 1:00 மணியளவில், அணுக்க தரிசனம் நடந்தது. ஆருத்ரா அபிஷேகத்தை பார்ப்பதற்கு, துாரத்தில் அமர்ந்திருந்த பக்தர்களின் வசதிக்காக, ஆங்காங்கே வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, சிவபக்தர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் சார்பில், அன்னதானம், பால் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.திருவள்ளூர் எஸ்.பி., சாம்சன் தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆருத்ரா அபிஷேகத்தில் வழிபட்டனர்.
52 ஆண்டுகளாக ஆருத்ரா அபிஷேகம் செய்யும் குருக்கள்: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், 8 வயதில் இருந்து, அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். நான், 2002ல், பணி ஓய்வு பெற்றேன். தற்போது, என் மகன் சபா ரத்தினம், கோவில் குருக்களாக தற்காலிகமாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். எனினும், 52 ஆண்டுகளாக, ஆருத்ரா அபிஷேகத்தை, நான் தான் தொடர்ந்து செய்து வருகிறேன். ஓர் ஆண்டில், ஆறு நாட்கள் நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை மாசி வளர்பிறை சதுர்த்தசி போன்ற ஆறு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. அதில், ஆருத்ரா அபிஷேகமும் ஒன்று. இந்த ஆறு அபிஷேகங்களையும் இன்று வரை நான் தான் நடத்தி வருகிறேன்.