பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
காஞ்சிபுரம் : திம்மசமுத்திரம் கிராமத்திற்கு, ஏகாம்பரநாதர் கோவில், பழைய உற்சவர் சிலை அனுப்பப்படாததால், இன்று நடைபெற இருந்த பார் வேட்டை உற்சவம் நடைபெறாமல் போயுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் உற்சவர் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி மற்றும் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் சுவாமி, பல்வேறு வாத்தியங்களுடன் ஒவ்வொரு காணும்q பொங்கலன்றும் காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்திற்கு செல்வது வழக்கம். இத்திருவிழா, கடந்த பத்தாண்டுகளாக, திம்மசமுத்திரம் கிராமத்தில் விமரிசையாக நடைபெற்று வந்தது. அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு, கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக இத்திருவிழா நடைபெற்றது. இவ்வாறு கொண்டாடப்பட்ட இத்திருவிழா இன்று தடைபட்டிருப்பது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏகாம்பரநாதர் கோவிலின் பழைய சிலை பழுதாகியுள்ளதால், திம்மசமுத்திரம் கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை உற்சவத்திற்கு அனுப்ப முடியாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பழைய சிலைதான் எங்கள் ஊருக்கு வர வேண்டும் எனவும், அச்சிலையை வைத்து தான் பூஜை செய்வோம் என, பார்வேட்டை திருவிழா நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால், இந்தாண்டு திருவிழா நடைபெறாமல் போயுள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்தாண்டு, இன்று கொண்டாட வேண்டிய திருவிழாவை, நடத்த முடியாமல் போயுள்ளதாக அனைவரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.