தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
தியாகதுருகம் அடுத்துள்ள சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மயான கொள்ளை திருவிழா நடந்தது.
நேற்று 9ம் நாள் தேர்திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.