பதிவு செய்த நாள்
17
ஜன
2017
02:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆடல், பாடலுடன் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த நெய்வாசல் கிராமத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதை தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, உறியடி போட்டி நடைபெற்றது. மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், நடனம் இசை நிகழ்ச்சியும், தமிழக கலைஞர்களின் கோலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் சார்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, ஹாலந்து ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, 60 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் நெய்வாசல் கிராம மக்கள், சுற்றுலா பயணிகளை, மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.வண்ணத்துப்பூச்சி பூங்காவில் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே உள்ள, மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன், சுற்றுலா பொங்கல் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, திருச்சியில் பல்வேறு ஓட்டல்களில் தங்கியிருந்த ஆஸ்திரேலியா, சிரியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், சிறப்பு பஸ்களில் மேலூர் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, மேள தாள வாத்தியத்துடன், மாட்டு வண்டிகளில், பூங்காவுக்குள் அழைத்துச் சென்றனர்.பாரம்பரிய முறைப்படி, மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். அங்கிருந்த கிராமத்து பெண்கள், குலவை ஒலியெழுப்பி, அவர்களை உற்சாகப்படுத்தினர்.