பதிவு செய்த நாள்
18
அக்
2011
11:10
சென்னை:இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரையின் முதல் குழு, நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, 165 ஆண்கள், 135 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 301 பேர், நேற்று சிறப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, இவர்கள் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக வந்ததால், அனைவரும் விமான நிலையத்தில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை, நேற்று துவங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபரைச் சேர்ந்தவர்கள், சென்னை வழியாக, இந்த ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த வகையில், தமிழகத்தில் இருந்து 3,900, புதுச்சேரியில் இருந்து 31, அந்தமானில் இருந்து 30 பேர் செல்கின்றனர். விமானம் தாமதம்: இவர்களில், முதல் கட்டமாக 165 பெண்கள், 135 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 301 பேர், நேற்று இரவு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டனர். குறிப்பிட்ட இந்த விமானம், ஜெட்டாவில் இருந்து புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு சென்னை வந்தடையும். பின், 12.30 மணிக்கு ஜெட்டா புறப்படும். ஆனால், ஜெட்டாவில் விமானம் புறப்பட்டபோது, தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்த விமானம் சென்னை வந்து சேர்வதில் தாமதமானது.நேற்று மாலை 6.20 மணிக்கு வந்த இந்த விமானத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருந்தவர்கள் ஏற்றப்பட்டனர். பின், இரவு 7.40 மணிக்கு, இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.உணவு ஏற்பாடு: விமானம் தாமதமாவதை அறியாமல், நேற்று காலை 10 மணி முதலே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 250க்கும் மேற்பட்டவர்கள், விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.அவர்கள் அனைவரும், விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. விமானம் தாமதம் காரணமாக, ஹஜ் பயணிகள் அனைவரும், 7 மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
வழியனுப்பு விழா: ஹஜ் புனித யாத்திரை முதல் குழுவை, இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறை செயலர் சந்தானம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.