பதிவு செய்த நாள்
18
அக்
2011
11:10
திருவனந்தபுரம்: பக்தர்களிடமிருந்து அர்ச்சகர்கள் காணிக்கை என்ற பெயரில், பணம் வசூலிக்கக்கூடாது. அர்ச்சனை, நேர்த்திக்கடன் முடித்த பின், பக்தர்களுக்கு இலையில் தான் பிரசாதம் வழங்க வேண்டுமென, பல்வேறு உத்தரவுகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விதித்துள்ளது. இது புதிய விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது. கேரளா திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோவில்களில், பக்தர்கள் தங்கள் அர்ச்சனை, நேர்த்திக்கடன் ஆகியவற்றை முடித்த பின், அவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் கையில் கொடுக்காமல், இலையில் வைத்தே வழங்கப்பட வேண்டும். பிற பக்தர்களுக்கு கையில் வழங்கலாம். பக்தர்கள் கோவில்களில் காணிக்கையாக வழங்கும் அனைத்தும், உண்டியல்களில் மட்டுமே போடப்படவேண்டும். அர்ச்சகர்களிடம் வழங்குவதோ, கோவில் சன்னிதிகளில் போடுவதோ தவிர்க்கப்பட வேண்டும். மூலவர் சன்னிதியில் பிரசாதம் வழங்குவதை தவிர்த்து, கோவிலில் அதற்கென இடத்தை தேர்வு செய்து, அங்கு மட்டுமே பிரசாதம் வழங்கப்படவேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை செயல்படுத்தவேண்டும் என, கோவில் விஜிலன்ஸ் துறை தேவஸ்வம் போர்டுக்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, அவற்றை செயல்படுத்த தேவஸ்வம் கமிஷனர் என்.வாசு அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். புதிய உத்தரவுகள் குறித்து, பக்தர்கள் தெரிந்து கொள்ள வசதியாக கோவில்களுக்கு முன்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவுகள், 1991 மற்றும் 2010ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கோவிலில் அர்ச்சகர்களுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை, குருவுக்கு சீடன் வழங்கும் காணிக்கையை போன்றது. அதை அரசோ, தேவஸ்வம் போர்டோ தடை செய்ய அதிகாரம் இல்லை. என்றெல்லாம் கடும் விவாதம் கிளம்பியது. ஓராண்டுக்குப் பின் மீண்டும், அதுபோன்ற உத்தரவுகள் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இது விவாதத்தை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.