பதிவு செய்த நாள்
27
ஜன
2017
12:01
செஞ்சி: மேல்மலையனுாரில், ஊஞ்சல் உற்சவம் நடத்துவதற்காக, சட்டப்படியான நடவடிக்கைகளை, இந்துசமய அறநிலையத் துறையினர் எடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாதந்தோறும், அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என, செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி வெங்கடேசன், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடத்துவதற்கு, இடைக்கால தடை விதித்தார். இதையடுத்து, இந்துசமய அறநிலையத் துறையினர், தை அமாவாசையான இன்று, ஊஞ்சல் உற்சவத்தை நடத்துவதற்காக, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தடை ஆணைக்கு, கோர்ட்டில் விலக்கு பெற்று, வழக்கம் போல், இன்று இரவு, ஊஞ்சல் உற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.