பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை வரும் செவ்வாய் கிழமை துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் அமைந்துள்ளது, சந்தான வேணுகோபால சுவாமி கோவில். பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஆறு மாதங்களாக புனரமைப்பு பணி நடந்தது. தற்போது, பணிகள் நிறைவடைந்த நிலையில், பிப்., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை செவ்வாய் கிழமை துவங்குகிறது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 9:00 மணிக்கு, புனிதநீர் கலசங்கள் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 10:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பாலாபிஷேகம்: வங்கனுார் கிராமத்தில் உள்ள எல்லம்மன் கோவில், 2014ல் புதிதாக கட்டப்பட்டது. நித்திய வழிபாடுகள், நவராத்திரி உற்சவம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்து செல்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வரும், 12ம் தேதி சிறப்பு உற்சவம்
நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிப்., 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, 108 பால் குட ஊர்வலம் புறப்படுகிறது. 11:30 மணிக்கு, எல்லம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும். மாலை 3:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, பெண்கள் படையல் வைக்கின்றனர். இரவு 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.