பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோருக்கு திதி கொடுத்து, வீரராகவரை வழிபட்டனர்.
குளத்தில் நீராடல்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில், ஆண்டுக்கு இரு முறை பிரம்மோற்வம் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று, சாலிஹோத்ர மகரிஷிக்கு, வீரராகவர் அருள்பாலித்த நாள், தை பிரம்மோற்சவமாக கருதப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், அமாவாசைக்கு முதல் நாள் வந்து, கோவில் வளாகத்தில் தங்கினர். காலையில், புண்ணிய குளமான ஹிருத்தாப நாசினி குளத்தில் நீராடி, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அருள்பாலிப்பு: நேற்று காலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மதியம், 1:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும், ஏராளமான பக்தர்கள், வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். பிரம்மோற்சவம்: தை பிரம்மோற்சவம், 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று காலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, உற்சவர் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4:00 மணிக்கு, நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு, 10:30 மணிக்கு யாளி வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தார். நாளை காலை, 5:40 மணிக்கு, பெருமாள் தேருக்கு எழுந்தருளி, 7:30க்கு தேரோட்டம் நடைபெறும்.
திருத்தணி: முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில், நேற்று தை அமாவாசையை ஒட்டி, அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை, திரளான பக்தர்கள் வந்து, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்ன தாக, குளத்தில் நீராடி, இறந்த தங்கள் முன்னோரின் ஆத்மா சாந்தி அடைய திதி கொடுத்தனர். நேற்று விட்டு, விட்டு பெய்த மழையிலும் தயங்காது, தர்ப்பணம் கொடுத்தனர்.