பதிவு செய்த நாள்
20
அக்
2011
10:10
ராசிபுரம்:ராசிபுரம் செல்லாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.அன்று இரவு 7 மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து, மாரியம்மன் ஸ்வாமி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோவிலில் பூச்சாட்டு விழா நடந்தது. அதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளுடன் வந்து ஸ்வாமிக்கு பூச்சாட்டினர்.நேற்று இரவு 7 மணிக்கு, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தினமும் இரவு 7 மணிக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று (அக்., 20) இரவு 8 மணிக்கு கம்பம் நடும் விழா, 31ம் தேதி இரவு 12 மணிக்கு, பூவோடு பற்ற வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.நவம்பர் 1ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி, கொடியேற்று விழா நடக்கிறது. 2ம் தேதி அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில், ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அன்று இரவு 10 மணிக்கு, அக்னி குண்டம் பற்ற வைக்கப்படுகிறது. நவம்பர் 3ம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தீ குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மாலை 4 மணிக்கு, ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர். நவம்பர் 4ம் தேதி வண்டி வேடிக்கை, 5ம் தேதி புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் ஸ்வாமி பவனி வந்து சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 6ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பவர் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை "விடையாத்தி கட்டளை நிகழ்ச்சிகள் நடக்கிறது.